Sunday, December 27, 2009

தெளிந்த கிரிக்கெட் பைத்தியம்சின்ன வயசுல நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் (மத்த நிறையா பேர் போலத்தான்).. வாய்ப்பு கிடைச்சா டெஸ்ட் மேட்ச்ச கூட ஒரு பந்து விடாம பார்க்க கூடிய ஆளு..

நியுசிலாந்துல நடக்கும் டெஸ்ட் மேட்ச் பார்க்கறதுக்கு காலைல நாலு மணிக்கு எழுந்து உக்காந்து டிவில brightness-அ நல்லா குறைச்சிட்டு, நெகட்டிவ் மாதிரி தெரியுறத பார்த்தத நெனச்சா இப்போ ரொம்ப ஆச்சரியமா இருக்கு (இல்லினா வீட்ல ஃடோஸ் விழும்!)!!

இந்தியா ஜெயிச்சா கொண்டாட்டம் தான்.. இந்தியா தோத்ததிறகு எத்தனையோ நாள் அழுதிருக்கேன்.. அதிலயும் குறிப்பா சென்னைல பாகிஸ்தான் கூட நடந்த மேட்ச்சுல (சச்சின், நயன் மோங்கியா கடைசி வரை போராடி) 12 ரன்ல தோத்ததுக்கு அழுதது இன்னிக்கு வரைக்கும் நினைவுல இருக்குது!

சோயிப் அப்ரிடி, ஜெயசூர்யா, அக்தர், மெக்ராத்தெல்லாம் நமக்கு சிம்ம சொப்பனம் (அவுங்க நல்லா ஃபார்ம்ல இருந்த போது) ..

நான் இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ற ஒரே காரணத்துக்காக என்னோட தம்பி எதிர் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவான்.. நிறையா தடவ சின்ன சின்ன அடிதடில முடிஞ்சிரும்!!

சரி, இன்னிக்கு நிலைக்கு வருவோம்.. திடீர்னு இப்படி ஒரு பதிவ போடறதுக்கு என்னா காரணம்?? இப்ப நான் லீவுல சேலத்துல இருக்கேன்.. நம்ம நண்பர்கள் நிறையா பேருக்கு கிரிக்கெட் (பார்க்கறதுல) இருக்க ஆர்வம் கொஞ்சம் கூட குறைஞ்சதா தெரியல.. ஒரு பந்து விடாம உக்காந்து கிட்டு பார்ககறது, 2 நிமிசத்துக்கு ஒரு தடவ போன் பண்ணி ஸ்கோர் கேட்கிறதெல்லாம் ரொம்ப செயற்கையா இருக்கிற மாதிரி தோணுது.. பெங்களூர் நண்பர்கள் கிட்டயும் இதே நிலைமை தான்.. மேட்ச் இருந்தா Rediff, CricInfoனு இறங்கிடறாங்க!!

எனக்கு இந்த அளவுக்கு கிரி்க்கெட்ல இருந்த ஆர்வம் குறைஞ்சி போனதுக்கு என்னா காரணமா இருக்கும் யோசித்தது தான் இந்த பதிவு!

ஆரம்பத்துல, வேலைக்குன்னு பெங்களூர், டெல்லினு டிவியே இல்லாம கிட்டதட்ட நாலு வருசம் இருந்ததுனால இதில இருந்த ஆர்வம் பாதியா குறைஞ்சி போச்சி..

அதிலயும் நான் ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல (MIS Department-ல) வேலை பார்த்த போது கிரிக்கெட்ல வீசற ஒவ்வொரு பந்துக்கு பின்னாடியும் எவ்ளோ காசு விளையாடுதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது.. (எல்லாருக்கும் தெரிஞ்சது தான்) இன்னிக்கு இந்தியாவுல வர விளையாட்டு சானல்கள்ள எவ்ளோ (இந்தியா) கிரிக்கெட் content இருக்துங்கறத பொறுத்து தான் அதனோட வியாபாரம்..

இதுக்கு வேற டிரெய்லர், டான்ஸ், Opening / Ending ceremony னு ஏகப்பட்ட பில்ட்-அப்புகள்.. இந்த அளவுக்கு பில்ட்-அப் கொடுத்து அவனவன் பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உக்காந்து நம்ம நேரத்த வீணடிச்சிக்க மனசு வரதில்ல..

டி20 மாதிரி ரொம்ப குறைந்த நேரமே வர விளையாட்டுகள பார்க்கலாம்னா கூட சரியா நேரம் செட் ஆகறதில்ல.. சமயம் கிடைக்குறப்போ டி20ல கடைசி 5 ஓவர் உக்காந்து பார்க்கறதோட சரி..

இதுக்கே எப்ப பாத்தாலும் கிரிக்கெட்னு பொண்டாட்டி கம்ப்ளைன்ட் (சும்மா சேனல் மாத்தி கிட்டு இருக்கும் போது கிரிக்கெட் வந்தா கூட!!)

இதுல நேரா போய் மைதானத்துல உக்காந்து பார்க்கறது வேற!! கம்பி வலைகளுக்கு பின்னாடி, மிருக காட்சி சாலை மாதிரி.. இதுல யார் மிருகம், யார் மனுசங்க.. இதுக்கு ஒரு சின்ன சாம்பிள் தான் முகப்புல இருக்க போட்டோ??

சரி பதிவ முடிக்கறதுக்கு முன்னாடி நெறயா பேருக்கு தெரிஞ்சு தெரியாத சில விசயங்கள்..

முதல்ல பிசிசிஐ (BCCI) பத்தி..
நெறையா பேர் நினைக்கிற மாதிரி இப்ப இருக்கிற இந்திய அணிங்கறது எந்த விதத்துலயும் நம்ம நாட்ட நேரடியா represent பண்றது இல்ல.. "டீம் இந்தியா" ங்கறது தான் முழு பிராண்ட் நேம்.. இது BCCI-ங்கற தனியார் அமைப்போட முழு நிர்வாகத்துல இருக்கு.. இப்ப இதுக்கு தான் முழுசா எல்லா அதிகாரமும், சப்போர்ட்டும்  இருக்கு.. இதுக்கு போட்டியா துவக்கப்பட்ட அமைப்புகளுக்கு விளையாட சரியா மைதானம் கூட கிடைக்கறது இல்லங்கிறது தான் உண்மை.. இந்த அணிக்கு என்னமே இந்திய ராணுவத்துக்கு இணையாதான் இந்த அணிக்கு மரியாதை.. இத சப்போர்ட் பண்ணலனா ஈசியா தேச துரோகினு முத்திரை குத்தீடுவாங்க.. இந்த உண்மை நிறையா பேருக்கு தெரிஞ்சாதான் BCCI-யோட monopoly கொஞ்சமாவது குறையும்..
 `Team India plays for BCCI, not Govt'

அடுத்து கொரியா அதிபர் கொடுத்திருக்கிற ஒரு அறிவிப்பு..
உற்பத்தி திறன் பாதிக்க படறதுனால கொரியாவுல உலக கோப்பை கால்பந்து போட்டிகள நேரடியா ஒளிபரப்ப தடை விதிச்சு இருக்காரு கொரிய அதிபர்.. கொரிய அணி ஜெயிச்சா மட்டும் ஹைலைட்ஸ்.. இல்லினா அவங்கவுங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்... நம்ப அம்மணி ஊர் ஊரா குடும்பத்தோட டூர் போறதோட சரி!!!!
North Korea to censor World Cup heavily

கடைசியா கிரிக்கெட்ட கொஞ்சம் மறந்திட்டு மத்த விளையாட்டுகளையும் ஊக்க படுத்தனும்கறது என்னோட தனிப்பட்ட ஆசை.

Sunday, December 20, 2009

போடுங்கம்மா ஓட்டு!!

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டப்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. 

நன்றி: மாலைமலர்

இந்த செய்திய மாலைமலர் இணைய தளத்துல படிச்சதும் என்னை அறியாம சொல்லிகிட்டது.. Ohh! Shit!!..

நல்லவரோ கெட்டவரோ நம்ம நாட்டில யாருக்கு இவ்வளவு தைரியம் இருக்குது????? (உள்ளுக்குள்ள இதெல்லாம் சும்மா ஸ்டண்ட்டுனும் ஒரு பட்சி கூவுது!!).. அதே மாதிரி எதிர்கட்சினா கண்ண மூடிட்டு எல்லாத்தையும் எதிர்க்கனுமா என்ன???

என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு எல்லாம் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாதான் கொஞ்சம் புத்தி வந்து ஓட்டு போடற அன்னிக்கு டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் க்யூவுல நின்னு ஓட்டு போட தோணும்!!

படிச்சவங்க சும்மா வாய்கிழிய பேசிட்டு டிவி முன்னாடியும், சினிமா தியேட்டர்லயும், இல்ல ப்ளாக் போடவும் ஒக்காதுடறாங்க.. சொல்ல போனா அன்னிக்கு ஒரு நாளைக்கு சினிமா தியேட்டர்களுக்கும் லீவு விட்டிடலாம்.. டிவிங்களுக்கும் அன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லலாம்.. இல்லனா இந்திய தொலைக்காட்சிகளி்ல் முதல் முறையாகனு எதாவது டப்பா படத்த போட்டுடுவாங்க!!

இப்பெல்லாம் நம்ம தொகுதி பிரதிநிதிய 40% ஆளுங்க தான் தேர்ந்தெடுக்கறாங்க.. அதாவது மொத்தமே 60-70% தான் சராசரியா ஓட்டு பதிவாகுது.. அதுல இருந்து 50-60% வாங்குனவங்கதான் ஜெயிச்சு சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் போறாங்க..

இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தா, நம்மூரு அரசியல்வாதிகளும் எத்தன ஆளுங்களத்தான் Canvas (!!) செய்ய முடியும்???? இதவிட டீசெண்ட்டா சொல்ல முடியல!!

அப்படியே வேட்பாளர்களுடைய சொத்து விபரம் (முன்பு வெற்றி பெற்றிருந்தால், போன ஆட்சி காலத்திற்கு முன்-பின்), அவர்கள் மேல் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களையும் ஓட்டு போடும் இடங்களில் வைத்தால் அவர்கள் எத்தனை நல்லவர்கள் என தெரிந்து கொண்டு வோட்டு போட முடியும்!!

Saturday, December 19, 2009

வலைசுத்தி - சொடுக்குங்க சொடுக்குங்க!!நம்ம இந்த பதிவுல பார்க்க போறது இணையத்துல பிரபலமான ஒரு சேவையான StumbleUpon பத்தி.. நான் இதுக்கு இப்ப வச்சிருக்கிற செல்ல (தமிழ்) பெயர் வலைசுத்தி (நம்மள மாதிரி இது ஒரு ஊர்சுத்தி போல)..

நான் இப்போ முக்கியமா வேலை செய்யறது Enterprise 2.0 / Web 2.0 அப்படீங்கிற துறையில தான்.. அதாவது இணையத்தை மையமா வச்சு தரப்படுகிற சேவைகள்.. அதனால இந்த மாதிரி கொஞ்சம் புதிய கருவிகள அல்லது சேவைகள தெரிஞ்சுக்கறதுல ஒரு ஆர்வம்..

சரி, இப்ப வலைசுத்தினா (அதாவது StumbleUpon) என்ன?
இப்ப நம்ம நண்பர் ஒருத்தரு ஊர் ஊரா சுத்தறாரு, நெறைய படம் பாக்குறாரு, மியுசிக் கேட்கறாரு, நெறையா விசயம் தெரிஞ்சிருக்காறுனு வச்சுக்கங்களேன்.. அவர்கிட்ட அடிக்கடி கேட்டு refer பண்ணிக்கிறோமில்ல.. அது மாதிரி விசயம் தாங்க இது.. (சச்சின்ல வர மாதிரி, வார்த்தைக்கு வார்த்தை சாரு சாருன்னு சொல்றீங்களேண்ணே)

அப்படீனா கூகுளாண்டாவருக்கு தெரியாததா இல்ல விக்கிபீடியாவுல இல்லாததா நம்ம வலைசுத்திக்கு தெரிய போவுதுனு சண்டைக்கு வராதீங்க..

அப்படியெல்லாம் இல்ல..

என்னா, இவுங்க கிட்டயெல்லாம் போய் நாம தேடுற விசயத்த சொல்லி கேட்டாதான ஒழுங்கா பதில் கிடைக்கும்.. இல்லனா குப்பைதான்..

அப்ப நம்ம ஆளு??
நமக்கு விருப்பமான விசயங்கள (Interests) இவருகிட்ட ஒரு முறை சொல்லிட்டா போதும்.. ஒவ்வொரு சொடுக்குக்கும் வித விதமா, வித்தியாசமா அதே சமயம் ரொம்ப பொருத்தமான விசயங்கள தருவாறு (Random and Matching)..

உதாரணமா இவருக்கிட்ட கிரிக்கெட்னு சொல்லிட்டு Stumble! கிற பட்டன ரெண்டு தட்டு தட்டுனதுக்கு கிடைச்ச பதில்கள்..

................இப்படியே மவுஸ் உடையவரைக்கும், இல்லைனா கை வலிக்கிற வரைக்கும் சொடுக்கிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

எப்படி வேலை செய்யுது??
இது நம்ம தமிழ்மணம் மாதிரி தமிழிஷ் மாதிரி (வலைப்பூவையும், திரட்டியையும் சேர்த்துக்குங்க) பதிவு செய்ய படற விசயங்கள் தான்.. நமக்கு பிடிச்ச ஒரு விசயத்த பதிவு பண்றதும், இல்ல எனக்கு பிடிச்சிருக்குன்னு (I Like it!)  ஓட்டு போடறதும் ஒரு பக்கத்தோட / தளத்தோட மதிப்ப கூட்டி அடுத்தடுத்த தேடல்கள்ள முன்னுரிமை தருது.. இதுக்கு நாம் உரிமையாளரா இருக்கனும்கறது அவசியம் இல்ல, கிட்டதட்ட Bookmark செய்யறமாதிரிதான்.. 2.2 வினாடிகள்ள புதிய பக்கங்கள பதிவு செய்ய முடிறது இதனோட சிறப்பம்சம்.. பட்டைகள் (Tags), சரியான தொகுப்புகள் (Categories), தவறா பதிவு செஞ்சிருந்தாலோ இல்ல பக்கம் காணாம போயிருந்தாலோ சுலபமா ரிப்போர்ட் பண்ற வசதிகள்னு பல User Friendly விசயங்கள் இருக்குது..

நம்ம தேர்வு செய்யற விசயங்கள் நம்ம விருப்ப பட்டியல்ல (Favorites) சேர்ந்துகிட்டே இருக்கும்.. கிட்டதட்ட 14 தொகுப்புகள்ள 500+ விருப்பங்கள (Interests) தேர்வு செஞ்சிக்க முடியும்... பட்டைய (Toolbar) பிரவுசர்ல பதிவு பண்ணிக்கலாம்...

https://addons.mozilla.org/en-US/firefox/addon/138

http://www.stumbleupon.com/help/Getting_Started/

இது மட்டுமில்லாம, நம்மள மாதிரி விருப்பங்கள உடைய நண்பர்கள தெரிஞ்சிக்க முடியும், மத்தவங்களோட பிடிச்ச விசயங்கள சுலபமா பகிர்ந்துக்க முடியும்.. YouTube, Flickr, BlogSpot, WikiPedia னு பிரபலமான Channelகள்ள இருக்கற விசயங்கள சுலபமா தேட, தெரிஞ்சிக்க முடுயும் (StumbleThru)

அதே மாதிரி நமக்கு விருப்பமான மொழியையும் தேர்வு செஞ்சி அதுல இருக்கிற விசயங்கள்ள உலாத்த முடியும்.. இப்போதைக்கு வலைசுத்தில தமிழ் சம்பந்தமா நிறைய விசயங்கள் கிடைக்கறதில்லங்கிறது ஒரு பெரிய குறை..

என்னுடைய அக்கவுண்டில் தேர்வு செஞ்சு வச்சிருக்கிற சில விருப்பங்கள்..

இனிமே என்ன, சொடுக்குங்க சொடுக்குங்க.. சொடுக்கிக்கிட்டே இருங்க!!

Sunday, December 13, 2009

இன்றைய தமிழ் சினிமாவின் ஒரு பகுதி நிலை (A part of it)

முன்னுரை: போன பதிவுல ரொம்ப நல்ல தரமான படமான முள்ளும் மலரும் பத்தி எழுதியிருந்தேன்..  இந்த பதிவுல இப்ப நம்ம தமிழ் சினிமா இருக்கிற நிலைமைய பத்தி எழுத வேண்டிய அவசியம்..

சமீபத்தில மூணாறு போயிருந்தோம் (வில்லி:: நண்பர்களோட மட்டும்னு போடு!).. திரும்பி வந்துகிட்டு இருக்கும் போது கார்ல ஒரு பாட்டு.. மானா மதுரைக்கு போற மச்சான்னு ஆரம்பிச்சுது.. இந்த பாடல்களோட வரிகள இதுக்கு மேல என் பதிவுல எழுத விருப்பம் இல்ல.. ஒரே ரெட்டை அர்த்த வரிகளோட விரசமா இருந்தது..

சரி எதோ லோக்கல் குத்து பாட்டுனு நெனச்சேன்.. பெங்களூர் சேலம் இடையே கிருஷ்ணகிரி பக்கத்துல நைட் டிபன் கடைகள்ள இருக்கிற ஆடியோ கடைகள்ள இருந்து புதுசு புதுசா பாட்டுக்கள் கேட்கும்.. குடிக்கிற புருசன திருத்தற மாதிரி சில நல்ல பாட்டுக்கள் உட்பட... படத்துல வந்து எல்லாம் நான் பாத்தததில்ல (கேட்டதில்ல)

இப்போ போன வாரத்துல டிவில ஏதோ டிரைலர் பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ 'மாட்டுத்தாவணி' ங்கிற படத்துல இருந்து அதே பாட்டு..

மாட்டுத்தாவணிங்கிற வார்த்தைய முதல் தடவையா கேக்குற அன்பர்களுக்கு, இது மதுரைல ஒரு முக்கியமான இடம்.. வெளியூர் பேருந்து நிலையம் இருக்கும் இடம் என்றால் மிகையாகாது, சாலப்பொருந்தும், !!@#!#@#%^#$! (நன்றி: விஜய டி.ராஜேந்தர், அரட்டை அரங்கம்).. சின்ன வயசுல லீவுல அடிக்கடி அத்தை வீட்டுக்கு மதுரைக்கு போனதுண்டு.

Back to Original topic, அடக் கடவுளே தமிழ் சினிமாவுலயே இந்த மாதிரி வர ஆரம்பிச்சிடிச்சா?? (உபயம்: பருத்திவீரன்)


இந்த மாதிரி கேள்விபட்ட உடனே நம்ம எல்லார் மனசுலயும் சாதாரணமா எழற கேள்விகள்:-

1. ஏன் இந்த அளவுக்கு மோசமா எடுக்கிறாங்க?
2. சென்சார் போர்டு என்ன செய்யுது??
3. இத கூட ரசிக்கிற ஆளுங்க இருப்பாங்களா??
4. சின்ன குழந்தைங்க கூட அர்த்தம் தெரியாம இத பாடிகிட்டு இருப்பாங்களே??
5. இது தான் இப்போதைய டிரெண்டா??

இது எல்லாத்துக்கும் என்னுடைய பார்வையிலுருந்து ஒரு சின்ன அலசல்.. இது இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் கிடையாது, இப்ப அடிக்கடி வர ரெட்டை அர்த்த காமெடிகள் மற்றும் இது போன்ற மற்ற பாடல்களுக்கும் சேர்த்துத்தான்.

முதல்ல இப்ப தியேட்டருக்கு போயி சினிமா பாக்குற audience பத்தி..

ரொம்ப நல்ல படங்கள் சிலவற்றைத் தவிர இப்போ பெண்கள் (so is, kids) சினிமா தியேட்டர் பக்கம் போறதில்லங்கறது என் கருத்து.. ஒட்டு மொத்தமா பார்த்தா கல்லூரி மாணவர்கள், ஒரு 16, 17 வயசுல ஆரம்பிச்சு விடலைகளும், இளைஞர்களும் தான் முக்கியமான audience..

என்ன மாதிரி சராசரியான ஆளுங்களுக்கு என்ன பிடிக்கும்கிறத விட, என்ன பிடிக்காது?

வள வள டயலாக்ஸ், too much of செண்டிமெண்ட், இழுவையான படங்கள்

சரி, என்ன பிடிக்கும்?
வேகமா விறுவிறுப்பா லேட்டஸ்ட் தொழில் நுட்ப தரத்தோட இருக்கிற ஆக்சன் படங்கள் (அயன், அஞ்சாதே), நல்ல கதைக்களத்தோட, லாஜிக்கோட இருக்கிற மாதிரி யதார்த்தமான படங்கள்.. (Ex: சுப்ரமணியபுரம், பசங்க, வெண்ணிலா கபடி குழு), காமெடி படங்கள் (சரோஜா), அவரவருக்கு விருப்பபட்ட நடிகர்களோட படங்கள்...

இது எல்லாத்துக்கும் எல்லையும் உண்டு, அளவுக்கு மிஞ்சினால்.... உதாரணங்கள் பல உண்டு.

எனக்கு ஒரு தனிபட்ட வருத்தம், யதார்த்தமா வர படங்கள் ஏன் மதுரைய சுத்தி இருக்கிற கிராமத்துல மட்டும் தான் எடுக்க முடியுமா?? அதுவும் எதாவது ஒரு வகையில சுத்தி சுத்தி வன்முறைய தான் காட்டணுமா??? சேலத்துல, திருச்சியில எல்லாம யதார்த்தமான, Soft ஆன ஆளுங்களே கிடையாதா??? அப்படியே வந்தாலும் ஏன் நம்ம ஆளுங்க அதை ஆர்ட் பிலிம் category ல அத சேர்த்துடறாங்க??

சரி இப்போ திருப்பியும் முதல் விசயத்துக்கு வருவோம்.. அந்த பாட்ட முதன் முதல்ல நண்பர்களோட கேட்கும் போது அதுல இருக்கிற ரெட்டை அர்த்த காமெடி தான் தெரிஞ்சது (உள்ளுக்குள்ள இருந்து ஒரு சைத்தான் சிரிக்குது).. ஆனா இதே பாட்ட குடும்பத்தோட உக்காந்து பார்க்க முடியுமா?? no chance.. So, இன்னொரு விசயத்த மறந்துட்டேன்.. குடும்பத்தோட தியேட்டருக்கு போற பழக்கமும் ரொம்ப குறைஞ்சிடிச்சு... Double Entendre பத்தி விக்கிபீடியா என்ன சொல்லுதுன்னு இங்க பாருங்க.. http://en.wikipedia.org/wiki/Double_entendre

இந்த மாதிரி ரெட்டை அர்த்த பாடல்கள் கோவில் திருவிழா சமயத்துல நடக்கும் கூத்துகள்ள தான் சாதாரணமா இருக்கும் (இங்க நல்ல தெருக்கூத்து கலைஞர்களை எந்த விதத்திலையும் குறிப்பிடல, இது குறவன் குறத்தி டான்ஸ் மாதிரி விசயம்).. அதுவும் நைட் 11-12 மணிக்கு மேல.. பெண்களும், குழந்தைகள் கூட்டமும் குறைந்த பிறகு.. it's more towards the targeted audience.. ஆனா இதே பாட்ட சினிமாவுலயும், டிவிலயும் திரும்ப திரும்ப கேட்க வேண்டிய சூழ்நிலை தான் இப்போது.. உங்கள யாரு இதயெல்லாம் பார்க்க சொன்னது கையில தான் ரிமோட் இருக்கேன்னு சொல்றவங்க கொஞ்சம் Practical ஆ யோசிச்சு பாருங்க pls.. Adults அ விடுங்க, இந்த காலத்து சின்ன பசங்க என்ன ஏதுன்னு முழுசா தெரியாமலயே இந்த மாதிரி பாடல்கள பாடறது ரொம்ப தர்ம சங்கடமான நிலைமை..

ரெண்டாவது இது தான் இந்த காலத்து டிரெண்டா??

இந்த மாதிரி படங்கள், பாடல்கள் இப்ப சமீபத்துல தான் வருதா, இல்லவே இல்ல... ஆரம்பத்துல இருந்தே அப்பப்ப இந்த மாதிரி வந்துகிட்டேத் தான் இருக்கு... ஆனா அதனுடைய அளவும், ரீச்சும் இப்ப அதிகமாயிருக்கு. முன்ன பத்துக்கு 1 படம் வந்தா இப்ப பத்துக்கு 3-4 படம் வருது போல.

கடைசியா திரைத்துறையினர் ஏன் இந்த மாதிரி எடுக்கிறாங்க?

இன்றைய வணிக உலகத்துல தியேட்டருக்கு வர ரொம்ப சில பேரையாவது திருப்தி பண்றோம்னு திரைத்துறையினர் சமரசம் செஞ்சுக்க வேண்டிய நிலைமை.. இவங்க கூட முழுசா விரும்பி இந்த மாதிரி செய்றாங்கனு தோணல? போட்ட பணத்தை எடுக்கவும், தோல்வி பட டைரக்டர், Artistனு ஆகாம தடுக்கவும் இந்த மாதிரி சில விசயங்கள சேர்க்கறாங்க.. போட்டிகள் ரொம்ப அதிகமா இருக்கிற காரணத்தினால தவறுகளும், குறுக்கு வழிகளும் பின்பற்ற படுகின்றன.. இது எங்க போய் முடியும்னு தான் தெரியல..சென்சார் போர்டுல இருந்து இந்த பாட்டு தப்பிச்சதானும் இன்னும் தெரியல... குறிப்பா A - U/A வாங்கின படங்கள் வந்த ரெண்டு மாசம் கழிச்சும் "Film is yet to be certified" னு தான் டிரைலர்ல போடறாங்க..


இவங்களுக்கு இன்னொரு முக்கியமான பிரச்சனை திருட்டு வி.சி.டி.. இப்பல்லாம் படம் வந்து ரெண்டாவது மூனாவது நாளே திருட்டு வி.சி.டி (VCD) கிடைக்குது.. இதை தவிர்க்க தயாரிப்பாளர், வினியோகஸ்தரே Original VCD அ படம் வெளியான உடனே கூடிய சீக்கிரம் வெளியட பட வேண்டியதுதான்.. அதுல வர வருவாயும் முறைப்படுத்தபடும்.. தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் ரிஸ்க் குறையும்.. இப்ப மட்டும் எல்லா படத்துக்கும் தியேட்டர்ல என்ன கூட்டம் அலை மோதிக்கிட்டா இருக்கு.. அது மட்டும் இல்லாம தியேட்டர்களையும் தரமா வச்சிருந்தா வரவங்க வராமலா இருப்பாங்க?? தியேட்டர்ல படம் பாக்கறது ஒரு தனி அனுபவம்.. கூட்டமா சேர்ந்து பார்க்கும் போது இருக்கற சந்தோசமே தனி.. போட்டிகள சமாளிக்கவும், குறுக்கு வழிகள பின் பற்றாம இருக்கவும் இத விட்டா வேறு வழி உடனடியா இருக்கானு தெரியல.

நல்ல உலகத்தரமான படங்கள் தமிழ்ல அதிகம் வர வேண்டுங்கறது என்னோட (hopefully, எல்லோருடைய) ஆசை!!

Saturday, December 5, 2009

முள்ளும் மலரும் - படம் பார்த்து கதை சொல் - ரஜினி ரசிகன்இந்த படம் வந்து 31 வருசம் ஆகுது!! நிச்சயம் பத்தரிக்கைகளிளும், வலையுலகத்திலும் நிறைய விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்திருக்கும்.. என்னுடைய வலைப்பூ ரொம்ப புதுசு.. நான் ரொம்ப சாதாரணமானவன் (I am a common man!!).. இந்த ரெண்டு விசயமும் தான் இந்த பதிவ எழுத நம்பிக்கை கொடுத்தது..

நான் ஆர்ட் பிலிம் பார்க்குற ஆளு கிடையாது.. பாட்ஷா, பில்லா, போக்கிரி மாதிரி மாஸ் படங்களோட ரசிகன்.. இது நிச்சயம் விமர்சனமும் அல்ல.. என்னால் தலைவர் படத்த விமர்சனம் பண்ணவும் முடியாது.. So, இந்த படத்திலிருந்து எனக்கு ரொம்ப பிடித்த விசயங்கள் தான் இந்த பதிவு.. இதனோட இருக்கிற போட்டோ ஆல்பத்த மிஸ் பண்ணிடாதீங்க.. please.. இந்த பதிவ + படங்கள் உங்க Bandwidth-அ ரொம்ப சாப்டிருந்தா அதுக்கு ஒரு advance sorry

படம் பார்க்காதவங்களுக்கு ஒரு சின்ன introduction.. படத்தோட கதை ரொம்ப ரொம்ப எளிமையானது (simple - yet powerful).. அண்ணன் - தங்கைக்கிடையே இருக்குற பாசமும், முரட்டு அண்ணன் (ரஜினி - காளி), வெகுளி தங்கச்சி (ஷோபா) மற்றும் ஒரு மென்மையான காதல்தான் (சரத்பாபு - ஷோபா) கதையோட முக்கிய அம்சங்கள்...

கதை: உமா சந்திரன்
...'கல்கி வெள்ளி விழா மலரில் பரிசு பெற்ற கதை!...'

(நன்றி azhagan for pointing me out)

இனி இதில் வர முக்கியமான கேரக்டர்ஸ் பத்தி..

சரத்பாபு:-
படித்த பட்டதாரியா, கிராமத்து அதிகாரியா வரும் இவரு உண்மையில ரொம்ப நல்ல யதார்த்தமான ஆளு.. ரஜினியோட முரட்டு சுபாவத்த புரிஞ்சுக்கிறதும், எப்ப பாத்தாலும் ரூல்ஸ் பேசறதும் அதே சமயம் கஷ்டம்னு வரும்போது கூட இருந்து உதவி பண்றதுமா மெச்சூர்டான கேரக்டர்.. தலைவர் தன் தங்கைய தர மறுக்கும் போது அவரோட முரட்டு சுபாவத்த கண்டு பின் வாங்கறது ரொம்ப இயல்பு.. படத்துல எனக்கு பிடிச்ச இவரோட வசனம் (தம்பிக்கா வக்காலத்து வாங்கற க்ளார்க்குகிட்ட பேசறது)..
"சரத்: ஆமா நம்ம ஆபிஸ்ல தம்பியே இல்லாத கிளார்க் யாராவது இருக்காங்கலா??
க்ளார்க்: ஏன் சார்?
சரத்: நான் காளிய பத்தி உண்மையான விவரங்கள தெரிஞ்சிக்க ஆசை படறேன்!!

ஷோபா:-
ரொம்ப வெகுளியா வர பொண்ணு.. படம் முழுக்க ரொம்ப நல்ல expressions!! அண்ணனுக்காக காதல விட்டு கொடுக்க க்ளைமேக்ஸ்ல முன் வரது ரொம்ப டச்சிங்

ரஜினியின் மனைவி்யா நடிச்சிருக்கிறவங்க..
ரொம்ப casual-ஆ அதே சமயம் கொஞ்சம் அடாவடியான கேரக்டர்.. ஆரம்பத்துல சோத்து மூட்டையா காட்டினாலும் காளி தவறான ஒரு ஆளுக்கு தன் தங்கச்சிய கட்டி கொடுக்கும் முடிவ எடுக்கும் போது எதிர்க்கிறதும், காளிய கையில்லனு கிண்டல் பண்றது தாங்காம போட்டியில கலந்து ஜெயிக்கிறதும், சரத்பாபு கிட்ட போய் பேசி ஷோபாவ கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கறதுமாக கேரக்டர் போகும்.. பிடித்த வசனம்..
casual-ஆ படுத்திருக்கும் போது பார்க்கும் ரஜினியிடம்.. "ஏன்யா முன்ன பின்ன பொம்பளயயே பாத்ததில்லியா!!".. தலைவரோட ரியாக்ஷன் சூப்பர்.

மகேந்திரன் - இளையராஜா - பாலு மகேந்திரா..
Deadly Combination!! ஒவ்வொறு கேரக்டர்லயும், ப்ரேம்லயும் மகேந்திரன் அவருடைய முத்திரை இருக்கும்... இசையராஜா (let the typo to be) பிண்ணனி இசையிலயும், பாடல்களிளையும் வெளுத்து வாங்கியிருக்காரு.. he and this film's music is my all-time favorite.. பாலு மகேந்திரா கிராமம், காடு, மலை, வானமுன்னு கலக்கியிருப்பாரு.. எதோ ஏற்காடு பக்கத்துல (உண்மைல சிக்கமங்களூர்னு நினைக்கிறேன்) எடுத்த மாதிரியோ ஒரு பீலிங்.. முப்பது வருசம் முன்னமே இவ்வளவு டீடெய்லா - royal salute :) இந்த படத்துல இவங்க work பத்தி இன்னும் பத்து பதிவு போடலாம்.. நேரமி்ன்மை காரணமா இவங்கள பத்தி இதோட நிறுத்திக்கிறேன்..

LAST BUT NOT THE LEAST, தலைவர் ரஜினி்யோட (முரட்டு) காளி Performance பத்தி... இந்த படத்துல தலைவர் நடிக்கல, வாழ்ந்திருக்காரு (விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன).. இப்ப திரும்ப இதே மாதிரி படமெல்லாம் அமையுமா?? எல்லோரும் வழக்கமா கேக்குற அதே கேள்வி,, ஏன் இதே கூட்டணியில இது மாதிரி, ஜானி மாதிரி இன்னும் நிறைய படங்கள் வரல?????

இனி ஒரு போட்டோ மாலை.. படங்களை பெரிதாக்கிட க்ளிக் செய்யவும்.. Don't miss my comments too :)

1978 ஆம்.. நம்ப முடியல!!


சின்ன பசங்க.. கண்ணுல கூட நடிப்பு.. மகேந்திரன்!!தலைவர் Intro!!!!!!!!!!
(சரத்பாபு யாருன்னு தெரியாம)  சார் யாருன்னு சொல்லலயே???


கோபம், சமாளிப்பு :)விளையாட்டு + In Direct message to சரத்பாபு


தலைவர் casual-ஆ உக்காந்து இருக்கிற போஸ் பாருங்க,
வாசிங்க சார்..... வாசிங்கடா டேய்!!


அவசரமா கூப்பிட்டாரா.. தா உடனே வந்துடறேன்...


தங்கச்சி காலுக்கு மருதாணி... ஐயோ, ஐயோ இப்ப இப்படி Natural-ஆ பாக்க முடியறதில்லியே..


பார்த்துக்கிறேன் சார்..
 

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!!


 

மேலே கல்யாணத்திற்கு முன்... கீழே கல்யாணத்திற்கு பின்.. தலைவருக்கு கூடவா.. சும்மா காமெடி!!!

 

(வேலைய விட்டு நீக்கும் போது) என்னா முடிவே பண்ணிட்டீங்களா..
 

(எனக்கு ரொம்ப பிடிச்ச சீன், வசனம்) கெட்ட பையன் சார் இந்த காளி.. ரெண்டு கை, ரெண்டு கால் போனா கூட பொழச்சிக்குவான் சார்.. என்னா ஒரு ego!!!
 

தலைவரோட ஷ்டைல், என்னா ஒரு முரட்டு தோற்றம்!!


தங்கச்சிக்கு அட்வைஸ்

 

தங்கச்சியவாடா தப்பா பேசறே... (கீழே கெடக்கறது.. வெண்ணிற ஆடை மூர்த்தி!!)
 

டச்சிங் க்ளைமேக்ஸ்..
 

கண்ணீர்

பிரிவு
 

சேர்க்கை, மகிழ்ச்சி!!


பெருமை


இன்ஞினியர் சார் எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல.. இருந்தாலும் என் தங்கச்சிக்காக..
 

 


எனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு சீன்ஸ்..
Mullum Malarum Touching Climax(உண்மையில் இந்த பதிவ எழுத ஆரம்பிக்கும் போது தலைவர் பிறந்த நாள் இன்னும் ஐஞ்சாறு நாள்ல வரது ஞாபகம் இல்ல.. இப்ப இது தலைவருக்கும், அவரோட ரசிகர்களுக்கும் ஒரு பிறந்த நாள் பரிசு)

Tuesday, December 1, 2009

21 பல் முளைத்த சைக்கிள்சின்ன வயசுல சைக்கிள்னா ரொம்ப ஆசை.. சேலத்துல NSR,NKPனு சைக்கிள் கடைகள்ள வார இறுதி ஆனா வரிசைல நின்னு மணிக்கு 1 ரூபாய்னு வாடகைக்கு எடுத்துட்டு ஊர் முழுக்க சுத்துவோம்.. சைக்கிள் உயரமே ரெண்டோ மூனோ அடிதான் இருக்கும்.. கடைசி அஞ்சு பத்து நிமிசம் இருக்கும் போது சைக்கிள் சும்மா பறக்கும்.. விடவே மனசு இல்லாம திருப்பி கொண்டு போய் விட்டுட்டு வருவோம்.

வீட்ல கூட அப்பா சின்ன வயசுல ஓட்டின ஒரு (சின்ன) பழைய சைக்கிள் இருந்தது.. முழுக்க இரும்பு.. டயரே கிடையாது! சின்னதா ஏதோ பெல்ட் மாதிரி ரிம்ம சுத்தி இருக்கும்.. கடா முடானு ஓடும்.. பிரேக்கல்லாம் நோ சான்ஸ்!!

போன வருசம் ஜெர்மன் போயிருந்தபோது அங்க சைக்கிளுக்கு இருக்கற மவுச பாத்துட்டு நமக்கும் அந்த மாதிரி ஒரு கியர் வச்ச சைக்கிள் வாங்கனுமுனு ஆசை வந்திடுச்சி..
அவனவன்(ள்!!) அழகழகா[;)] சைக்கிள் ஓட்டிட்டு போறதும், ஏதோ ஒலிம்பிக்ஸ்ல மெடல் வாங்குன வீரன் மாதிரி உடம்ப மெயின்டெயின் பண்றதும் ஆச்சரியமா இருந்நதது..
நம்ம ஊர்ல நடக்கறதுக்கு இருக்கற மாதிரி அங்க சைக்கிளுக்கினே தனி ட்ராக் போட்டு இருந்தாங்க.. அதுல நடந்து போனா கூட கோபமா முறைப்பானுங்க..
அதே போல அங்கங்க சைக்கிள கட்டி வைக்க அழகழகா நெறயா கம்பி பதிச்சு இருந்தது..

இப்ப நம்ம கதைக்கு வருவோம்.. அந்த மாதிரி கியர் சைக்கிள் வாங்குற ஐடியா மனசுல துளிர் விட்டுடிச்சி.. ஆபிஸ்லயும் நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேர் அதே ஐடியால இருந்தாங்க.. வீட்ல சொன்னா வில்லி (பொண்டாட்டி) வேனவே வேண்டாங்கிறா.. பல நாள் சொல்லி சொல்லி ஒரு வழியா அவ சம்மதம் வாங்கப்பட்டது..

சரினு ஒரு சுபயோக சுபதினத்தில நாங்க எல்லோரும் (பெங்களூர்ல) ஒரு சைக்கிள் கடைக்கு போனோம்.. எங்க பட்ஜெட் அதிக பட்சம் எட்டாயிரமுன்னு முடிவு..

அதுக்க தகுந்த மாதிரி FireFox ங்கிற மாடல் காண்பிச்சாங்க.. பேர்லயே ஒரு அட்ராக்ஃஷன் (தொழில் புத்தி).. சரினு ஓட்டி பாத்தோம் ரொம்ப நல்லாயிருந்தது.. கிட்டதட்ட முடிவு பண்ணி பில் கட்ட் போறோம்..

FireFox பக்கத்துலயே Trekனு ஒரு மாடல்..


இப்ப கொஞ்சம் STD (வரலாறுங்கோ!!)
சைக்கிள் பொறுத்த வரை Tour de France அப்படீங்கற போட்டி ரொம்ப பிரபலம்.. கிட்டதட்ட 21 நாள் தொடர்ச்சியா France ஆல்ஃப்ஸ் மலைகள்ள 3500+ கி.மீ னு தவிடு திங்க வைக்கும் போட்டி..

லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங் (Lance Armstrong) னு ஒருத்தர் தான் champion..
இதுல்ல நம்ம ஆளு Trek யூஸ் பண்ணி 7 முறை தொடர்ச்சியா ஜெயிச்சிருக்காரு.. அட சைக்கிளுக்கு ஒரு மைக்கேல் ஃஸ்மேக்கர்னு வச்சுக்கங்களே
...
...
...

இப்ப நான் எங்க இருக்கேன்.. (ஒரு கவுண்டமணி ஜோக்: அது என்னடா மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிக்கனுங்க எல்லாம் இதே கேள்வி கேக்கறீங்க.. இங்க மயக்கம் போட்டு என்னா அமெரிக்காவுலயா எந்திரிக்க போற)

ஆங்.. சைக்கிள் கடைல ட்ரெக் ரக சைக்கிள் பக்கத்துல.. சரி சும்மா ஒரு டெஸ்ட் ரன் பண்ணி பாக்கலாம்.. இதுக்கெல்லாம் என்னா காசா கேக்க போறாங்கனு நம்பீஈஈ ஏறி உக்காந்து பெடல்ல ஒரு ரெண்டு மிதி.. சும்மா காத்து மாதிரி போகுது.. 21 கியரு.. சும்மா கியர் மேல போக போக இன்னும் ஃப்ரீயா போகுது.. ஒரு கட்டத்துல வேகத்த கட்டுபடுத்தி அந்த சின்ன எடத்துல ஓட்டவே முடியல.. அடடா இது என்னடா மதுரைக்கு வந்த புது சோதனை!!

திரும்பி நாங்க (ஃப்ரெண்ட்ஸ்) எல்லாம் ஒரு வட்ட மேஜை மாநாடு.. எல்லாருக்கும் ஒரே குழப்பம்.. சரினு ஆபிஸிக்கு வந்துட்டோம்.. ஒரு வாரம் பயங்கர டிஸ்கஷன்.. ஆளாளுக்கு அட்வைஸ்.. இருபதாயிரம் போட்டு சைக்கிளா.. அவ்ளோ காசு போட்டு வாங்கி என்னா பண்ண போறீங்க.. கம்மி விலைல வாங்குனா தான் நல்லா எக்ஸர்சைஸ் பண்ண முடியும்.. மீண்டும் ஒரே குழப்பம்..

கிட்டத்ட்ட ரெண்டு வாரம் கழிச்சு ஒரு முடிவு பண்ணி போய் ட்ரெக் புக் பண்ணிட்டோம்.. கண்ணு முன்னாடியே part-by-partஆ assemble பண்ணி தந்தாங்க.. ஹெல்மெட் அது இதுன்ன extra fittings வேற..

இத எழுதும் போது நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன்.. தம்பி தங்கி இருக்கற வீட்டு ஓனர் Trekக்கு தாத்தா மாதிரி சூப்பரா ஒரு சைக்கிள் வச்சிருக்காரு.. ஆளாளுக்கு இதே மாதிரி..

சரி சைக்கிள் வாங்கின கதை போதும்.. அத ஓட்டினது,சில Benefits and Disadvantages..

சில Benefits
1. நம்மள மாதிரி ஆளுக்கெல்லாம் ஒரு நல்ல exercise.. சும்மா ஆபிஸ்க்கு எடுத்துட்டு போய்ட்டு வந்தாலே தினமும் 5-6 கி.மீ சைக்கிள் ஓட்டன மாதிரி ஆச்சி
2. ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கும்.. சும்மா லொங்கு லொங்குனு மிதிக்காம பஞ்சு மாதிரி இருக்கும்.. மேடு வந்தா 2-3னு கியர்ல மிதிக்கறதே தெரியாது.. இறக்கத்துல சும்மா 18-21 கியர்ல பறக்கும்!!
3. சீட்டிங் மத்த இத்யாதியெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க, முதுகு வலி அது இதுனு ரொம்ப தொந்தரவு வராது..
4. ஓட்டும் போது சின்ன பசங்க மாதிரி ரொம்ப யூத்தா ஒரு ஃபீலிங்

சில Disadvantages
1. பெங்களூர்ல பைக்ல போறவனையே மதிக்க மாட்டாங்க.. சைக்கிள்னா நடந்து போறவன்ல இருந்து பஸ்காரன் வரை டார்ச்சர் பண்றாங்க
2. மழை காலத்துல ரொம்ப பிரச்சினை (பைக்குக்கும் same blood)
3. பத்திரமா வச்சிருக்கறதும் ரொம்ப கஷ்டம்.. ரோட் சைட்ல பார்க்கிங் பண்ணினா கூட எவனாவது ஈசியா தூக்கிட்டு போய்டுவானோனு பயம்

ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போக முடியலனு பொண்டாட்டி டார்ச்சர் வேறனு நான் சொல்லல!!

Thursday, November 19, 2009

பேராண்மை - சில திருத்தங்கள்

தீபாவளிக்கு சேலம் போயிருந்தபோது இந்த தடவ எதிர்பார்த்த சில படங்கள் (வேட்டைக்காரன், யோகி, ...) ரிலிஸ் ஆகல..

தீபாவளிக்கு முந்தின நாள் இரவு காட்சிக்கு பேராண்மை முன்பதிவு செஞ்சு வெச்சிருந்தோம்.. தீடிர்னு ஆதவன் வேற சிறப்பு காட்சி போடறாங்க.. டிக்கெட் வெல சாதாரணமா 150 - 200 னு சொல்றாங்க..

பேராண்மை படத்த, அதிலிருந்த கருத்துக்கள பத்தி ஏராளமான விமர்சனங்கள வந்திருச்சி.. இந்த பதிவு அது எத பத்தியும் இல்ல.. திரைக்கதை சில மாற்றங்கள பண்ணி இருந்தா இன்னும் ரொம்ப நல்லா.. உண்மையாலுமே ஆங்கில படத்துக்கு இணையா ஒரு தமிழ் படம் கெடச்சிருக்குமோனு தோணுது.. இது முழுக்க முழுக்க நானே சிந்திச்சது (கோவை சரளா போல படிக்கவும்)..

1. ஜெயம் ரவி Discovery சேனல்ல வர commentator மாதிரி ரன்னிங் commentary கொடுத்துகிட்டே இருக்கிறது பயங்கர கடுப்பு.. ஆக்சன் படத்துக்கு தேவையான விறுவிறுப்பையும், வேகத்தையும் கெடுக்குது.. நச் நச்னு வசனம் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்..

2. பருத்திவீரன்ல போலிஸ் ஏட்டை படுத்துவாங்களோ அந்த மாதிரி சர்வதேச கூலிப்படைய டீல் பண்ணுவது கொஞ்சம் கூட workout ஆகல - பொருந்தல.. தரணி இந்த மாதிரி விசயத்துல கில்லாடி (தூள், கில்லி மாதிரி சில படங்கள் மட்டும்).. ஹீரோவ நல்லா சிக்கல்ல மாட்டி விட்டுட்டு கடைசி நேரத்துல பூந்து வெளயாட வுடுவாரு.. லாஜிக்கே இல்லங்குறது படத்த முடிச்சதுக்கப்புறம் தான் தோணும்..

3. வெளிநாட்டு தீவிரவாதிங்க பெரிய பெரிய துப்பாக்கிய அவங்க வைச்சுகிட்டு, வெறுங்கையோட வர ரவி & கோ வ பார்த்துட்டு ஓடறாங்க.. என்ன கொடும சார் இது..

4. உண்மையா இவங்க (ரவி & கோ) ஓடி ஒளிஞ்சு அப்பப்போ கொரில்ல முறையில தாக்கறமாதிரி இருந்திருக்கலாம்.. திரில் மெயின்டெய்ன் ஆகி இருக்கும்..

5. காட்டுக்குள்ள பாட்டு, பர்த் டே கொண்டாடுறது (கேக் கட் பண்ணி) ரொம்ப ஓவர்..

6. திரும்பி போய் உதவிய கூட்டிட்டு வற பொண்ணு (காதல்ல வற ஃப்ரெண்டு.. உங்க போதைக்கு நாங்க ஊறுகாயான்னுவாங்களே) ரொமான்டிக் மூடுலயே அலையிறதும் எனக்கு பிடிக்கல.. காட்டுக்குள்ள வற பாட்டுல பொண்ணு சுதந்திரமுன்னு வரிகள வச்சிட்டு இது ரொமாண்டிக்கா ரவிய பார்த்துகிட்டே இருக்குது.. எ.கொ.சா இது??

சில நல்ல விசயங்கள்..

1. ரவி இந்த மாதிரி ஒரு நேரடி தமிழ் கதைய தேர்ந்தெடுத்தது.. அவரால முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணியிருக்காரு.. வாழ்த்துக்கள்

2. தமிழுக்கு (இப்போ இருக்க ட்ரெண்டுக்கு) வித்தியாசமான, கொஞ்சம் புதிய கதைக்களம்

3. அங்கங்க நச் நச் வசனங்கள்..

4. சாதி வேறுபாட்ட இவ்ளோ வெளிப்படையா வெளிச்சம் போட்டு இருக்கிறது..

5. பொண்வண்ணனுக்கு ஒரு சலாம்... கொஞசம் கூட நல்ல விசயங்களே இல்லாத கேரக்டர ஒத்துகிட்டு பண்ணியிருக்கறது..

6. ரவிக்கு ஜோடியா யாருமே இல்லாதது..

7. கொஞ்ச நேரமே வர வடிவேலு..

Wednesday, November 18, 2009

வெளவால தீயில போட்டு

ஒரு குட்டி பதிவு

இன்னிக்கு எதோ படிச்சு கிட்டு இருந்த போது
this is THE property of ... னு வந்தது..

நான்: திஸ் இஸ் தீ பிராப்பர்டி....

பொ: 'தீ' பிராப்பர்டினு சொல்லக்கூடாது.. நெறையா பேர் இப்படி தான் சொல்றாங்க..

ம.சா: சரி, சொல்லிட்டு போகட்டும்.. ஆரம்பிச்சுட்டாயா ஆரம்பிச்சுட்டா

பொ: வெளவல் (vowels) க்கு தான் 'தீ'னு உச்சரிக்கனும்

ம.சா: ஏன் வெளவாலுக்கு தீ ரொம்ப புடிக்குமா?? சுட்டு சாப்பிட்டதே இல்லியே!! அப்ப காக்காவுக்கு தண்ணினு சொல்லனுமா..

நான்
: அப்படியா.. நீ ரொ....ம்ப புத்திசாலி

(பொ: பொண்டாட்டி, ம.சா: மனசாட்சி)


பதிவுக்குள்ள பதிவு: II

நமக்கு சீரியல்னாலே அலர்ஜி.. பொண்டாட்டியும் அவ்ளோவா பாக்க மாட்டா..
7மணி.. எதோ பாட்டு சத்தம்.. நீல கலர்ல இங்கியும் அங்கியும் ஓடிகிட்டுருந்தாங்க..

பொ: விஜய் டிவீல மகாராணி சீரியல்ல பாட்டு நல்லாருக்கும்...
நான்: சரி, மியூட்ல வச்சி கேளு!!


பதிவுக்குள்ள பதிவு: III

ரொம்ப சமீபத்துல ரசிச்ச ஜோக்..
(அம்மா) அய்யய்யோ.. பொண்ணு வெள்ளி கிழமையும் அதுவுமா ஓடி போயிட்டாலே..
சந்தானம்: அப்ப சனிக்கிழமை ஓடிப்போனா பரவாயில்லையா?? பாரு எல்லாம் ஓடிப்போறதுக்கு ரெடியா வரிசையா உக்காந்துகிட்டு இருக்கிறத!!

(கண்டேன் காதலை)

வடிவேல், சந்தானம் காமெடி தனித்தனியா பாக்கவே சூப்பரா இருக்கும்..
இதுல திருப்பியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்துல நடிக்கறாங்களாம்.....

வடிவேலு அவரு பாணில நடிக்க, பேச அத சந்தானம் ஓட்ட... நல்லா ஹிட்டாச்சுனா ஒரு புது காம்பினேசன் கெடைக்கும்..

Monday, November 16, 2009

சேலம் - செவ்வாய்பேட்டை / பழைய பஸ் ஸ்டாண்டு - சிறு வயது ஞாபகங்கள்

நான் முதன் முதலா என்னா எழுதலாமுன்னு யோசிச்சப்போ, சின்ன வயசுல தான் life ரொம்ப interesting-ஆ போன மாதிரி கொஞ்சம் தோனுச்சு.. சரி அதப்பத்தியே பார்ப்போம்.. எனக்கு இப்ப 26 தான் ஆகுது.. படிச்ச பள்ளிக்கூடம் பத்தி முடிஞ்சா தனி பதிவ போடலமுன்னு ஒரு ஐடியா..

ஒரு 13 - 14 வயசுல (பிஞ்சுலயே பழுத்தது) ஆரம்பிச்சு பயங்கரமா ஊர் சுத்தி, கிரிக்கெட் விளையாண்டு, சினிமா பார்த்து ரொம்ப ஜாலியா இருந்தத பத்தி பார்ப்போம்.. அதுக்கும் தலைப்புக்கும் என்னா சம்பந்தம்??

அப்ப ப.பே.நி (பழைய பேருந்து நிலையம்) சு்த்தி கிட்டதட்ட 30 சினிமா தியேட்டர் இருந்நது.. ஞாயிற்று கிழமைகள்ள அரிசி கடை (கணக்கு பிள்ளை) மாமாங்க கூட சேர்ந்து காலைல ஃபுல்லா கிரிக்கெட் விளையாண்டுட்டு அப்படியே வரிசையா 3 சினிமா தொடர்ச்சியா பார்ப்போம்.. டிக்கெட் 1.75 க்கு மேல போக மாட்டோம் (அதிகபட்சமே 8-10 தான் இருக்கும்)..

தப்பி தவறி எதாவது ஹிட் படத்தோட் தரை டிக்கெட் கவுஃண்டர்ல மாட்டுனா அவ்ளோ தான்.. ரெண்டு மூனு மணி நேரம் அங்கியே டேராதான்.. மூச்சு விட கூட முடியாது.. லோக்கல் ரவுடிங்க சாதாரணமா தலை-தோல் மேல கால வைச்சு நடந்து போவானுங்க, எப்ப பாத்தாலும் அடி தடி சண்டைதான் (நம்ப வீரமா வேடிக்க பார்க்கறதோட சரி).. போதாக்குறைக்கு போலிஸ் வேற சைடுல கன்னா பின்னானு அடிப்பாங்க.. இதே மாதிரி திருவண்ணாமலைல கிரிவலம் போயிட்டு ஹேராம் படத்துக்காக வெயிட் பண்ணினப்போ பர்ஸ எவனோ அடிச்சிட்டான் (மொத்தமே 85 தான் இருந்ததா ஞாபகம்).. நல்ல வேளைக்கு கூட அந்த ஊர் ப்ரெண்ட்ஸ் கூட இருந்தாங்க..

எதாவது டப்பா படம் வந்தா உடனே எடுத்துடுவாங்கனு அததான் முதல்ல பார்ப்போம்.. முடிச்சுட்டு வந்தா ரெண்டாவதா பாத்த படத்துல ஹீரோ சரத்குமாரா கார்த்தியானு confuse ஆகி, ப்ரெண்ட்ஸ் கூட பயங்கரமா விவாதம் பண்ணுவோம். அப்போ ஷங்கர் / கேப்டன் படத்த பார்த்துட்டு 2000/2010-ல இந்தியா (தானா) வல்லரசிகிடும்னு பேசிட்டு தூங்கிடுவோம்.. அதுல்ல ஒரு சந்தோஷம்-சுயநலம்.. என்னமோ நமக்கு எல்லாரும் (ஒன்னும் பண்ணாமலே) சலாம் போட போறதா நெனப்பு..

காந்தி ஸ்டேடியம், CSI School-னு, சின்ன சின்ன கிரவுண்டுங்க (உபயோகத்தில இல்லாத அப்பள கம்பெனி வரை) நிறையா கிரிக்கெட் விளையாட முடிஞ்சது.. சின்ன வயசுல புவி ஈர்ப்பு விசைங்கற ஒன்னையே மறந்த சமயம்.. watchman துரத்தினா ரொம்ப சுலபமா 10-15 அடி உயர கேட்டு, சாரமுன்னு ஏறி escape ஆகிடுவோம்.. பாவம் எங்கள புடிக்க முடியாம எத்தன ஆளுங்க மாறுனாங்கனு தெரியல..

சேலத்துல ஓட்டல சாப்பிடறது ரொம்ப ரொம்ப சகஜமான ஒன்னு.. ஏகப்பட்ட ஓட்டலுங்க.. இதுல எனக்கு பிடிச்சது.. ரொம்ப detail-ஆ இன்னொறு பதிவுல பார்ப்போம்

மங்களம், விவேகானந்தா, மத்த மிலிட்டரி ஹோட்டலுங்க - தோசை, சிக்கன் வருவல், கொழம்பு,
பிரியாணி கடைங்க, சூப் கடைங்க: ஆட்டுக்கால் (சூப்), கோழி சூப், ரத்த பொறியல், மசாலாவுல ஊறப்போட்ட முட்டை, குஷ்பு இட்லி + மெல்லிசான கொழம்பு..
செவ்வாய்பேட்டை: ஆதி பராசக்தி / (பாம்பே) சுந்தர விலாஸ் / கந்த விலாஸ் / நைட் கடைங்கனு ஏகப்பட்ட எடத்துல நாள் ஃபுல்லா போய் ஒரு வெட்டு வெட்ட ரொம்ப வசதியான ஏரியா

இன்னும் தோட்டத்து கிணத்துல நீச்சல் வகுப்பு எடுத்தது.. பைக்ல சேலம் ஃபுல்லா சுத்துனது, (எவ்ளோ...... பெரிய்யயயயயய மா(வட்டம்)த்தரே...), சோப்பு கம்பெனில part-time ஆ வேல பார்த்ததுனு நிறைய பாக்கலாம்..

பொண்டாட்டி ரொம்ப முறைக்கிறா.. I am the ESCAPE!!!

ஆரம்பம்

எல்லாருக்கும் வணக்கம்.. நான் (வசந் என்கிற வசந்தகுமார்)* சேலத்துல* இருந்து வரேன்.. எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர்*, கொஞ்சம் ஜாவா* தெரியும்.. சேலம் - பெங்களூருக்கு* 200 கிமீ தான், 20 நிமிசத்துக்கு ஒரு பஸ்* இருக்கு.. so இப்போ நான் எங்க இருக்கேன் என்னா பண்றேனு கண்டுபிடிக்க மதுகோடாவ விட்டுட்டு CBI-ஆ வருவாங்க

இப்போ ரொம்ப recent-ஆ (ரெண்டு மூனு நாளா) தமிழ்மணத்துல பதிவுகள படிச்சதுல இருந்து நம்ம ஏன் ஒரு பதிவ ஆரம்பிக்க கூடாதுன்னு நெனச்சு இத ஆரம்பிச்சுட்டேன்*.. இதத்தான் Generation Y-னு சொல்றாங்களோ??

இத எழுதலாமுன்னு நெனச்ச போது US காரனே வேலய முடிச்சுட்டு வூட்டுக்கு போற டைம் ஆகியிருக்கும்.. பொண்டாட்டி என்ன ப்ளாஃக்-ஆ போடா பொறுக்கினு திட்டிட்டு திரும்பி தூங்கிட்டா*

மனசுல இருக்கறத அப்படியே எழுதினா அட்ரஸ் கண்டுபுடிச்சு வூட்டுக்கு ஆட்டோ எதாவது வராத வரைக்கும் நல்லது.. கன்னடா ரக்சனே காரனுங்களுக்கு தமிழ் படிக்க வராதுன்னும் நம்பிக்கை தான்.. எதோ படத்துல சொல்ற மாதிரி நம்பிக்கை தான வாழ்க்கைனு!!

நமக்கு தமிழ், தலைவர் (ரஜினிதாங்க*), சேலம், நண்பர்கள், ஜாவா, பயணங்கள், சரித்திரம், சிக்கன் (சாப்பிட மாட்டும்), ... , இதெல்லாம் ரொம்ப இஷ்டம்..

பாக்கலாம் இந்த முயற்சி எப்படி போகுதுன்னு!!

* - இதுக்கெல்லாம் ஒரு தனி பதிவே போடலாமுன்னு தோனுது