Sunday, December 27, 2009

தெளிந்த கிரிக்கெட் பைத்தியம்



சின்ன வயசுல நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் (மத்த நிறையா பேர் போலத்தான்).. வாய்ப்பு கிடைச்சா டெஸ்ட் மேட்ச்ச கூட ஒரு பந்து விடாம பார்க்க கூடிய ஆளு..

நியுசிலாந்துல நடக்கும் டெஸ்ட் மேட்ச் பார்க்கறதுக்கு காலைல நாலு மணிக்கு எழுந்து உக்காந்து டிவில brightness-அ நல்லா குறைச்சிட்டு, நெகட்டிவ் மாதிரி தெரியுறத பார்த்தத நெனச்சா இப்போ ரொம்ப ஆச்சரியமா இருக்கு (இல்லினா வீட்ல ஃடோஸ் விழும்!)!!

இந்தியா ஜெயிச்சா கொண்டாட்டம் தான்.. இந்தியா தோத்ததிறகு எத்தனையோ நாள் அழுதிருக்கேன்.. அதிலயும் குறிப்பா சென்னைல பாகிஸ்தான் கூட நடந்த மேட்ச்சுல (சச்சின், நயன் மோங்கியா கடைசி வரை போராடி) 12 ரன்ல தோத்ததுக்கு அழுதது இன்னிக்கு வரைக்கும் நினைவுல இருக்குது!

சோயிப் அப்ரிடி, ஜெயசூர்யா, அக்தர், மெக்ராத்தெல்லாம் நமக்கு சிம்ம சொப்பனம் (அவுங்க நல்லா ஃபார்ம்ல இருந்த போது) ..

நான் இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ற ஒரே காரணத்துக்காக என்னோட தம்பி எதிர் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவான்.. நிறையா தடவ சின்ன சின்ன அடிதடில முடிஞ்சிரும்!!

சரி, இன்னிக்கு நிலைக்கு வருவோம்.. திடீர்னு இப்படி ஒரு பதிவ போடறதுக்கு என்னா காரணம்?? இப்ப நான் லீவுல சேலத்துல இருக்கேன்.. நம்ம நண்பர்கள் நிறையா பேருக்கு கிரிக்கெட் (பார்க்கறதுல) இருக்க ஆர்வம் கொஞ்சம் கூட குறைஞ்சதா தெரியல.. ஒரு பந்து விடாம உக்காந்து கிட்டு பார்ககறது, 2 நிமிசத்துக்கு ஒரு தடவ போன் பண்ணி ஸ்கோர் கேட்கிறதெல்லாம் ரொம்ப செயற்கையா இருக்கிற மாதிரி தோணுது.. பெங்களூர் நண்பர்கள் கிட்டயும் இதே நிலைமை தான்.. மேட்ச் இருந்தா Rediff, CricInfoனு இறங்கிடறாங்க!!

எனக்கு இந்த அளவுக்கு கிரி்க்கெட்ல இருந்த ஆர்வம் குறைஞ்சி போனதுக்கு என்னா காரணமா இருக்கும் யோசித்தது தான் இந்த பதிவு!

ஆரம்பத்துல, வேலைக்குன்னு பெங்களூர், டெல்லினு டிவியே இல்லாம கிட்டதட்ட நாலு வருசம் இருந்ததுனால இதில இருந்த ஆர்வம் பாதியா குறைஞ்சி போச்சி..

அதிலயும் நான் ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல (MIS Department-ல) வேலை பார்த்த போது கிரிக்கெட்ல வீசற ஒவ்வொரு பந்துக்கு பின்னாடியும் எவ்ளோ காசு விளையாடுதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது.. (எல்லாருக்கும் தெரிஞ்சது தான்) இன்னிக்கு இந்தியாவுல வர விளையாட்டு சானல்கள்ள எவ்ளோ (இந்தியா) கிரிக்கெட் content இருக்துங்கறத பொறுத்து தான் அதனோட வியாபாரம்..

இதுக்கு வேற டிரெய்லர், டான்ஸ், Opening / Ending ceremony னு ஏகப்பட்ட பில்ட்-அப்புகள்.. இந்த அளவுக்கு பில்ட்-அப் கொடுத்து அவனவன் பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உக்காந்து நம்ம நேரத்த வீணடிச்சிக்க மனசு வரதில்ல..

டி20 மாதிரி ரொம்ப குறைந்த நேரமே வர விளையாட்டுகள பார்க்கலாம்னா கூட சரியா நேரம் செட் ஆகறதில்ல.. சமயம் கிடைக்குறப்போ டி20ல கடைசி 5 ஓவர் உக்காந்து பார்க்கறதோட சரி..

இதுக்கே எப்ப பாத்தாலும் கிரிக்கெட்னு பொண்டாட்டி கம்ப்ளைன்ட் (சும்மா சேனல் மாத்தி கிட்டு இருக்கும் போது கிரிக்கெட் வந்தா கூட!!)

இதுல நேரா போய் மைதானத்துல உக்காந்து பார்க்கறது வேற!! கம்பி வலைகளுக்கு பின்னாடி, மிருக காட்சி சாலை மாதிரி.. இதுல யார் மிருகம், யார் மனுசங்க.. இதுக்கு ஒரு சின்ன சாம்பிள் தான் முகப்புல இருக்க போட்டோ??

சரி பதிவ முடிக்கறதுக்கு முன்னாடி நெறயா பேருக்கு தெரிஞ்சு தெரியாத சில விசயங்கள்..

முதல்ல பிசிசிஐ (BCCI) பத்தி..
நெறையா பேர் நினைக்கிற மாதிரி இப்ப இருக்கிற இந்திய அணிங்கறது எந்த விதத்துலயும் நம்ம நாட்ட நேரடியா represent பண்றது இல்ல.. "டீம் இந்தியா" ங்கறது தான் முழு பிராண்ட் நேம்.. இது BCCI-ங்கற தனியார் அமைப்போட முழு நிர்வாகத்துல இருக்கு.. இப்ப இதுக்கு தான் முழுசா எல்லா அதிகாரமும், சப்போர்ட்டும்  இருக்கு.. இதுக்கு போட்டியா துவக்கப்பட்ட அமைப்புகளுக்கு விளையாட சரியா மைதானம் கூட கிடைக்கறது இல்லங்கிறது தான் உண்மை.. இந்த அணிக்கு என்னமே இந்திய ராணுவத்துக்கு இணையாதான் இந்த அணிக்கு மரியாதை.. இத சப்போர்ட் பண்ணலனா ஈசியா தேச துரோகினு முத்திரை குத்தீடுவாங்க.. இந்த உண்மை நிறையா பேருக்கு தெரிஞ்சாதான் BCCI-யோட monopoly கொஞ்சமாவது குறையும்..
 `Team India plays for BCCI, not Govt'

அடுத்து கொரியா அதிபர் கொடுத்திருக்கிற ஒரு அறிவிப்பு..
உற்பத்தி திறன் பாதிக்க படறதுனால கொரியாவுல உலக கோப்பை கால்பந்து போட்டிகள நேரடியா ஒளிபரப்ப தடை விதிச்சு இருக்காரு கொரிய அதிபர்.. கொரிய அணி ஜெயிச்சா மட்டும் ஹைலைட்ஸ்.. இல்லினா அவங்கவுங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்... நம்ப அம்மணி ஊர் ஊரா குடும்பத்தோட டூர் போறதோட சரி!!!!
North Korea to censor World Cup heavily

கடைசியா கிரிக்கெட்ட கொஞ்சம் மறந்திட்டு மத்த விளையாட்டுகளையும் ஊக்க படுத்தனும்கறது என்னோட தனிப்பட்ட ஆசை.

Sunday, December 20, 2009

போடுங்கம்மா ஓட்டு!!

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டப்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. 

நன்றி: மாலைமலர்

இந்த செய்திய மாலைமலர் இணைய தளத்துல படிச்சதும் என்னை அறியாம சொல்லிகிட்டது.. Ohh! Shit!!..

நல்லவரோ கெட்டவரோ நம்ம நாட்டில யாருக்கு இவ்வளவு தைரியம் இருக்குது????? (உள்ளுக்குள்ள இதெல்லாம் சும்மா ஸ்டண்ட்டுனும் ஒரு பட்சி கூவுது!!).. அதே மாதிரி எதிர்கட்சினா கண்ண மூடிட்டு எல்லாத்தையும் எதிர்க்கனுமா என்ன???

என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு எல்லாம் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாதான் கொஞ்சம் புத்தி வந்து ஓட்டு போடற அன்னிக்கு டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் க்யூவுல நின்னு ஓட்டு போட தோணும்!!

படிச்சவங்க சும்மா வாய்கிழிய பேசிட்டு டிவி முன்னாடியும், சினிமா தியேட்டர்லயும், இல்ல ப்ளாக் போடவும் ஒக்காதுடறாங்க.. சொல்ல போனா அன்னிக்கு ஒரு நாளைக்கு சினிமா தியேட்டர்களுக்கும் லீவு விட்டிடலாம்.. டிவிங்களுக்கும் அன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லலாம்.. இல்லனா இந்திய தொலைக்காட்சிகளி்ல் முதல் முறையாகனு எதாவது டப்பா படத்த போட்டுடுவாங்க!!

இப்பெல்லாம் நம்ம தொகுதி பிரதிநிதிய 40% ஆளுங்க தான் தேர்ந்தெடுக்கறாங்க.. அதாவது மொத்தமே 60-70% தான் சராசரியா ஓட்டு பதிவாகுது.. அதுல இருந்து 50-60% வாங்குனவங்கதான் ஜெயிச்சு சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் போறாங்க..

இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தா, நம்மூரு அரசியல்வாதிகளும் எத்தன ஆளுங்களத்தான் Canvas (!!) செய்ய முடியும்???? இதவிட டீசெண்ட்டா சொல்ல முடியல!!

அப்படியே வேட்பாளர்களுடைய சொத்து விபரம் (முன்பு வெற்றி பெற்றிருந்தால், போன ஆட்சி காலத்திற்கு முன்-பின்), அவர்கள் மேல் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களையும் ஓட்டு போடும் இடங்களில் வைத்தால் அவர்கள் எத்தனை நல்லவர்கள் என தெரிந்து கொண்டு வோட்டு போட முடியும்!!

Saturday, December 19, 2009

வலைசுத்தி - சொடுக்குங்க சொடுக்குங்க!!



நம்ம இந்த பதிவுல பார்க்க போறது இணையத்துல பிரபலமான ஒரு சேவையான StumbleUpon பத்தி.. நான் இதுக்கு இப்ப வச்சிருக்கிற செல்ல (தமிழ்) பெயர் வலைசுத்தி (நம்மள மாதிரி இது ஒரு ஊர்சுத்தி போல)..

நான் இப்போ முக்கியமா வேலை செய்யறது Enterprise 2.0 / Web 2.0 அப்படீங்கிற துறையில தான்.. அதாவது இணையத்தை மையமா வச்சு தரப்படுகிற சேவைகள்.. அதனால இந்த மாதிரி கொஞ்சம் புதிய கருவிகள அல்லது சேவைகள தெரிஞ்சுக்கறதுல ஒரு ஆர்வம்..

சரி, இப்ப வலைசுத்தினா (அதாவது StumbleUpon) என்ன?
இப்ப நம்ம நண்பர் ஒருத்தரு ஊர் ஊரா சுத்தறாரு, நெறைய படம் பாக்குறாரு, மியுசிக் கேட்கறாரு, நெறையா விசயம் தெரிஞ்சிருக்காறுனு வச்சுக்கங்களேன்.. அவர்கிட்ட அடிக்கடி கேட்டு refer பண்ணிக்கிறோமில்ல.. அது மாதிரி விசயம் தாங்க இது.. (சச்சின்ல வர மாதிரி, வார்த்தைக்கு வார்த்தை சாரு சாருன்னு சொல்றீங்களேண்ணே)

அப்படீனா கூகுளாண்டாவருக்கு தெரியாததா இல்ல விக்கிபீடியாவுல இல்லாததா நம்ம வலைசுத்திக்கு தெரிய போவுதுனு சண்டைக்கு வராதீங்க..

அப்படியெல்லாம் இல்ல..

என்னா, இவுங்க கிட்டயெல்லாம் போய் நாம தேடுற விசயத்த சொல்லி கேட்டாதான ஒழுங்கா பதில் கிடைக்கும்.. இல்லனா குப்பைதான்..

அப்ப நம்ம ஆளு??
நமக்கு விருப்பமான விசயங்கள (Interests) இவருகிட்ட ஒரு முறை சொல்லிட்டா போதும்.. ஒவ்வொரு சொடுக்குக்கும் வித விதமா, வித்தியாசமா அதே சமயம் ரொம்ப பொருத்தமான விசயங்கள தருவாறு (Random and Matching)..

உதாரணமா இவருக்கிட்ட கிரிக்கெட்னு சொல்லிட்டு Stumble! கிற பட்டன ரெண்டு தட்டு தட்டுனதுக்கு கிடைச்ச பதில்கள்..

................இப்படியே மவுஸ் உடையவரைக்கும், இல்லைனா கை வலிக்கிற வரைக்கும் சொடுக்கிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

எப்படி வேலை செய்யுது??
இது நம்ம தமிழ்மணம் மாதிரி தமிழிஷ் மாதிரி (வலைப்பூவையும், திரட்டியையும் சேர்த்துக்குங்க) பதிவு செய்ய படற விசயங்கள் தான்.. நமக்கு பிடிச்ச ஒரு விசயத்த பதிவு பண்றதும், இல்ல எனக்கு பிடிச்சிருக்குன்னு (I Like it!)  ஓட்டு போடறதும் ஒரு பக்கத்தோட / தளத்தோட மதிப்ப கூட்டி அடுத்தடுத்த தேடல்கள்ள முன்னுரிமை தருது.. இதுக்கு நாம் உரிமையாளரா இருக்கனும்கறது அவசியம் இல்ல, கிட்டதட்ட Bookmark செய்யறமாதிரிதான்.. 2.2 வினாடிகள்ள புதிய பக்கங்கள பதிவு செய்ய முடிறது இதனோட சிறப்பம்சம்.. பட்டைகள் (Tags), சரியான தொகுப்புகள் (Categories), தவறா பதிவு செஞ்சிருந்தாலோ இல்ல பக்கம் காணாம போயிருந்தாலோ சுலபமா ரிப்போர்ட் பண்ற வசதிகள்னு பல User Friendly விசயங்கள் இருக்குது..

நம்ம தேர்வு செய்யற விசயங்கள் நம்ம விருப்ப பட்டியல்ல (Favorites) சேர்ந்துகிட்டே இருக்கும்.. கிட்டதட்ட 14 தொகுப்புகள்ள 500+ விருப்பங்கள (Interests) தேர்வு செஞ்சிக்க முடியும்... பட்டைய (Toolbar) பிரவுசர்ல பதிவு பண்ணிக்கலாம்...

https://addons.mozilla.org/en-US/firefox/addon/138

http://www.stumbleupon.com/help/Getting_Started/

இது மட்டுமில்லாம, நம்மள மாதிரி விருப்பங்கள உடைய நண்பர்கள தெரிஞ்சிக்க முடியும், மத்தவங்களோட பிடிச்ச விசயங்கள சுலபமா பகிர்ந்துக்க முடியும்.. YouTube, Flickr, BlogSpot, WikiPedia னு பிரபலமான Channelகள்ள இருக்கற விசயங்கள சுலபமா தேட, தெரிஞ்சிக்க முடுயும் (StumbleThru)

அதே மாதிரி நமக்கு விருப்பமான மொழியையும் தேர்வு செஞ்சி அதுல இருக்கிற விசயங்கள்ள உலாத்த முடியும்.. இப்போதைக்கு வலைசுத்தில தமிழ் சம்பந்தமா நிறைய விசயங்கள் கிடைக்கறதில்லங்கிறது ஒரு பெரிய குறை..

என்னுடைய அக்கவுண்டில் தேர்வு செஞ்சு வச்சிருக்கிற சில விருப்பங்கள்..





இனிமே என்ன, சொடுக்குங்க சொடுக்குங்க.. சொடுக்கிக்கிட்டே இருங்க!!